7 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு: குமாரபாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

7 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு: குமாரபாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

Update: 2021-10-27 18:21 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் 7 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வாக சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடை உத்தரவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் சாலையில் இருந்து நாராயண நகர், அம்மன் நகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோட்டைமேடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சாலை குறுகலாகி விட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளருக்கு மனு அனுப்பினர். 
இதையொட்டி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட்டில் சாலை விரிவாக்கத்திற்கு தடை உத்தரவு பெற்றனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமலும், சாலை விரிவாக்கம் செய்ய முடியாமலும் இருந்து வந்தது. இந்தநிலையில் சாலை விரிவாக்க பிரச்சினை குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 
வாக்குவாதம்
இதையடுத்து நேற்று காலை  குமாரபாளையம் தாசில்தார் சரஸ்வதி, நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் ஆக்கிரமிப்பாளர்ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
காலஅவகாசம்
எனினும் ஆக்கிரமிப்பில் உள்ள 2 மாடி கட்டிடங்களில் வசிப்போர் பொருட்களை எடுக்க 2 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டதன்பேரில் அந்த கட்டிடத்தை மட்டும் விட்டு விட்டு சிறிய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்