அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்; அமைச்சர் பேட்டி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தீபத்திருவிழா குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களின் வளர்ச்சிப்பணிகள், சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக சட்டமன்ற சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் எண்ணத்திற்கு ஏற்ப அமைச்சர் சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறையை செயல்படுத்தி கொண்டு வருகிறார்.
ஓம் நமசிவாய திருமந்திரம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தெப்பல் உற்சவம் அய்யங்குளத்தில் நடைபெறுவதால், அதனை தூர்வாரி, தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு உள்ள காலியிடங்களை கோவிலுக்கு பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தில் கடைகளை கட்டி, மைய பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிக்கு பஞ்சாமிர்தம், திருப்பதிக்கு லட்டு என்பது போன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தால் இலவசமாக புளியோதரை, கற்கண்டு கிடைக்கும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை நேரங்களில் ஓம் நமசிவாய என்ற திருமந்திரம் ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கடைகளில் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலைக்கு இணையாக பர்வதமலையிலும் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். எனவே அங்கேயேயும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.84 கோடி மதிப்பில்...
அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர் 70 கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதங்கள் வழங்கியுள்ளார்.
அனைத்து பணிகளும் திட்ட மதிப்பிடுதல், திட்டம் தயாரித்தல் போன்ற நிலையில் உள்ளது. கோவில் கடை வாடகைகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் ரூ.84 கோடியில் 48 பணிகள் செயல்படுத்துவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தேர்களை பாதுகாக்க கட்டிடம் அமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
தங்கத்தேர் இழுத்தல்
முன்னதாக அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வந்த தங்க தேரினை இழுத்து தொடங்கி வைத்து, ஓதுவார் பயிற்சி பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் கோவில் வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றினை நட்டு வைத்தார். அம்மணி அம்மன் கோபுரம் அருகில் மருத்துவ முதலுதவி மையத்தினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய லிங்க மைதானம் அருகில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி (யாத்திரி நிவாஸ்) கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்து வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் திருவண்ணாமலை-செங்கம் சாலையில் கட்டப்பட்டு வரும் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தின் கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவி தேஜா, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகர செயலாளர் கார்த்திவேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரா.ஜிவானந்தம், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரைவெங்கட், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், டி.கதிரவன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கு.ரமேஷ் உள்பட அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அடிப்படை வசதிகள்
அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட சட்ட அறிவிப்புகள், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒட்டு மொத்தமாக கோவில்களில் 12 ஆண்டுகள் முடிவுற்று திருப்பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பணிகள், ஏற்கனவே திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு குட முழுக்கு நடைபெறாமல் உள்ள பணிகள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 8 பணிகளும், மற்ற கோவில்களுக்கு 36 பணிகள் என்று ஒட்டுமொத்தமாக ரூ.84 கோடியில் திருப்பணிகள், கோவில்கள் புனரமைத்தலும், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நந்தவனங்கள் ஏற்படுத்துதல், திருமண மண்டபங்கள், அன்னதான கூடங்கள் கட்டுவது, பக்தர்கள் தங்கு பணிகளை புனரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் 112 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தோம். இதன் மூலம் 20 ஆயிரம் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பணிகளை முழுமை அடைய செய்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
தீபத்திருவிழாவை பொறுத்தவரையில், இது கொரோனா காலம் என்பதால் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின்னர் தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்படாத நிலை இருக்குமானால் நிச்சயம் கோவில் விழாக்கள் நடத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால் அஷ்ட லிங்க கோவில்களும் திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.