குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை பலி
பாடாலூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்தனர்.
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் திருவளக்குறிச்சியை அடுத்துள்ள ராஜாமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு மகாலட்சுமி (வயது 5) மற்றும் தேவிஸ்ரீ (3) ஆகிய இரண்டு மகள்கள். இந்தநிலையில் சுகன்யா மீண்டும் கர்ப்பமானார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் பாடாலூர் அரசு மருத்துவமனைக்கு சுரேஷ் அழைத்துச் சென்றார்.அப்போது குழந்தைகளை அவர்களின் உறவினரிடம் விட்டுச் சென்றிருந்தார். பின்னர், மருத்துவமனையில் இருந்து தம்பதி வீடு திரும்பியபோது குழந்தைகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாடாலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் குழந்தைகளை தேடி வந்தனர்.
குட்டையில் மூழ்கி இருவரும் பலி
இந்தநிலையில் நேற்று காலை சுரேஷ் வீட்டின் அருகே உள்ள குட்டையில் அக்காள்-தங்கை இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து சிறுமிகள் விளையாடிய போது குட்டையில் தவறி விழுந்து இறந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காள்-தங்கை ஒரே நேரத்தில் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.