வேன் கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்

ராஜபாளையத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Update: 2021-10-27 18:12 GMT
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 
வேன் கவிழ்ந்தது 
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கூமாபட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவரது குடும்பத்தினர் பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். 
வேனை அதே பகுதியை சேர்ந்த சேகர்  என்பவர் ஓட்டினார். இவர்களது வாகனம் ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கோதை நாச்சியார்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் இரு சக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. எனவே இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் வேனை திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
2 பேர் படுகாயம் 
 இந்த விபத்தில் வேனில் வந்த பாண்டியன், இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
மேலும் வேனில் சென்ற டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்