தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை காணலாம்.
திண்டுக்கல்:
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
தேனி புதிய பஸ் நிலையம் அருகே விஸ்வநாததாஸ் நகரில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரத்தில் குப்பைகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே விஸ்வநாததாஸ் நகரில் குப்பை தொட்டிகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
2 மாதங்களாக குடிநீர் கிடைக்காத அவலம்
பள்ளப்பட்டி ஊராட்சி ஏ.பி.நகரில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோகுல்ஹரன், ஏ.பி.நகர்.
சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அங்கு டாக்டர்களும் முறையாக வருவதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பக்கத்துக்கு ஊருக்கு சென்று பொதுமக்கள் சிகிச்சை பெறவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்ஸ், திண்டுக்கல்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
நிலக்கோட்டை அன்னைநகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தெருவை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்மராஜன், நிலக்கோட்டை.
மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்
ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சி வீ.கூத்தம்பட்டி 7-வது வார்டு நடுத்தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கின்றன. அதில் கொசுப்புழுக்கள் உருவாகிறது. இதன் காரணமாக இரவில் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே மழைநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலச்சந்தர், வீ.கூத்தம்பட்டி.
தாமதமாகும் தார்சாலை பணி
கம்பம் நகராட்சி பாரதியார்நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது தெருக்களில் ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. தார்சாலையும் அமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாமதமாகும் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இருளப்பன், கம்பம்.