அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
கடலூரில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.
கடலுர்,
கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மன்ற வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் தலைவர் திருமாறன் (அ.தி.மு.க.) தலைமையில் துணை தலைவர் ரிஸ்வானா பர்வீன் (தே.மு.தி.க.), மாவட்ட ஊராட்சி செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.
தயாராக இல்லை
கூட்டத்தில் பா.ம.க. மாவட்ட கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இது வரை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவர் கலந்து கொள்ளாததால் எந்த அதிகாரிகளும் வரவில்லை. மக்களுக்காக சேவை செய்ய அதிகாரிகள் தயாராக இல்லை.
மக்கள் பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியவில்லை. சிப்காட் பகுதியில் ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்று ஏற்கனவே கூட்டத்தில் வலியுறுத்தினேன். ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றார்.
தீர்வு
தொடர்ந்து பேசிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி, கலெக்டர் கண்டிப்பாக கூட்டத்துக்கு வர வேண்டும். வந்தால் தான் எங்களின் குறைகளை சொல்ல முடியும், அதற்கு தீர்வு ஏற்படும். அரசு விழாக்களுக்கு மாவட்ட கவுன்சிலர்களை அழைப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட கவுன்சிலர் சித்ரா ராமையன், தம்பிபேட்டை ஊராட்சியில் 100 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டா இது வரை வழங்கவில்லை. இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ம.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, கலெக்டர் வராததால் எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் கூட்டத்தில் பேசி எந்த தீர்வும் ஏற்படாது. விரைவில் தலைவர் தலைமையில் குழு அமைத்து, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார்.
30 நிமிடத்தில் முடிந்தது
மற்ற மாவட்ட கவுன்சிலர்களும், கூட்டத்தில் பேசி பயனில்லை என்று யாரும் பேச முன்வரவில்லை. கூட்டத்தில் அதிகாரிகள் அமருவதற்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் மாவட்ட கவுன்சிலர்களுடன் வந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவரது கணவர்கள் கூட்டத்தில் விவாதம் செய்ததை பார்க்க முடிந்தது. அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.