பள்ளிக்கூட சத்துணவு மையத்தை சரிசெய்ய வேண்டும்
பள்ளிக்கூட சத்துணவு மையத்தை சரிசெய்ய வேண்டும்
வால்பாறை
வால்பாறை அருகே காட்டு யானைகள் சேதப்படுத்திய பள்ளிக் கூட சத்துணவு மையத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சத்துணவு மையம் சேதம்
மலைப்பகுதியான வால்பாறையில் அடிக்கடி காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 4 மாதங் களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் லோயர்பாரளை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தன.
பின்னர் அந்த யானைகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தின் சுற்று சுவரை உடைத்தன. தொடர்ந்து ஜன்னலை உடைத்து அதன் வழி யாக துதிக்கையை விட்டு அரிசி, பருப்புகளை எடுத்து சாப்பிட்டு விட்டு சேதப்படுத்தி சென்றன.
சரிசெய்யவில்லை
இந்த சத்துணவு மையத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தி 4 மாதங்கள் ஆகியும் இதுவரை அதை சரிசெய்ய எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே வருகிற 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
எனவே பள்ளிக்கூடங்களை பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைக்க கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இந்த பள்ளியில் சத்துணவு மையம் சரிசெய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஆபத்து ஏற்பட வாய்ப்பு
வருகிற 1-ந் தேதி இங்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சேத மான கட்டிடத்தில் வைத்துதான் சமையல் செய்ய வேண்டும். ஆனால் சேதமான இடத்தில் வைத்து சமையல் செய்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் வால்பாறை பகுதி முழுவதும் நகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் நகராட்சி கட்டுப்பாட்டில் வரவில்லை. இதனால் இந்த பள்ளிகளில் எவ்வித பணிகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அனைத்தை யும் நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.