பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு

பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு;

Update: 2021-10-27 16:46 GMT
பொள்ளாச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். கவனக்குறைவு காரணமாக பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. 

இதை தடுக்க பொள்ளாச்சி தீயணைப்புத்துறை சார்பில் காந்தி மார்க்கெட், கடைவீதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிலைய அதிகாரி புருஷோத்தமன் துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

தரமான பட்டாசுகள் 

பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பிற்கு தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை அருகில் வைக்க வேண்டும். கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை வெடித்த பிறகு தண்ணீரில் நனைத்தோ அல்லது உலர்ந்த மணலில் அவற்றை மூடி வைக்க வேண்டும். தரமான பட்டாசுக்களை வாங்கி வெடிக்க வேண்டும்.

குழந்தைகள் பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும். கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வானத்தை நீண்ட பத்தி களை பயன்படுத்தி கொளுத்த வேண்டும். பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மேல் எரிச்சல் அடங்கும் வரை ஊற்றிக் கொண்டு இருக்க வேண்டும். 

சீன பட்டாசுகளை வாங்கக்கூடாது 

பெரியோர்களின் பாதுகாப்பின்றி குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது. வெடிக்காத பட்டாசுக்களை சேகரித்து மீண்டும் வெடிக்க முயற்சிக்கக்கூடாது. வீட்டிற்குள் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுக்களை கொளுத்த கூடாது. 

குடிசைகள் நிறைந்த பகுதிகள், ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள பகுதிகளில் ராக்கெட் மற்றும் பட்டாசுக்களை வெடிக்க கூடாது. சீனா பட்டாசுக்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்