காலிபிளவர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

காலிபிளவர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

Update: 2021-10-27 16:44 GMT
குடிமங்கலம், 
குடிமங்கலம் பகுதியில் காலிபிளவர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காலிபிளவர்
குடிமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒருசில விவசாயிகள் சிறந்த லாபம் தரக்கூடிய காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
 காலிபிளவர் சாகுபடியைப் பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும். எனவே அனுபவ விவசாயிகள் அல்லது தோட்டக்கலைத்துறையினரின் வழிகாட்டலை பெற்று காலிபிளவர் சாகுபடியில் ஈடுபடுவது இழப்பை தவிர்ப்பதற்கான வழியாகும்.  
  சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடியது மற்றும் கால்சியம் சத்து அதிகம் கொண்டது என்ற வகையில் காலிபிளவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் எல்லா காலத்திலும் காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவரை நல்லமுறையில் பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கத்தொடங்கும் ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும் 90 நாட்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல் அதிகரிப்பு
அறுவடை செய்யப்படும் காலிபிளவர் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடியை பொருத்தவரை பூக்களை அறுவடை செய்யக்கூடிய தருணத்தில் மழை பெய்தால் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்படக்கூடும்.
 அசுவினி பூச்சிகள், வெட்டுப்புழுக்கள், கூட்டுப்புழு, நூற்புழு மற்றும் இலைப்புள்ளிநோய் வேர் முடிச்சு போன்றவற்றினால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக முறையான பராமரிப்பு மேற்கொண்டால் சிறந்த மகசூல் பெற முடியும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்