தொடர் மழையால் பாம்பாறு அணை நிரம்பியது
தொடர் மழை காரணமாக ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை நிரம்பியது.
ஊத்தங்கரை:
தொடர் மழை
ஊத்தங்கரை அருகே பாம்பாற்றின் குறுக்கே அணை உள்ளது. இந்த அணைக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. பாம்பாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருமணிமுத்தாற்றில் கலக்கிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் அதிலிருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் ஜவ்வாது மலையில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
அணை நிரம்பியது
இதனால் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அணையில் இருந்து பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.