அனுப்பர்பாளையம்,
ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் நேற்று காலை நம்பியூரில் இருந்து பனியன் துணிகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு வந்தார். பின்னர் அங்கு பனியன் துணிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் நம்பியூருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
கூத்தம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில நிமிடங்களில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்ததுடன், தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. காரில் கியாஸ் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக காரில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் காரை விட்டு குமார் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.