திருடிய சைக்கிளை நிறுத்தத்தில் விட்டு விட்டு தப்பிய திருடன்
பெருந்துறையில் திருடிய சைக்கிளை நிறுத்தத்தில் விட்டுவிட்டு திருடன் தப்பினான். சைக்கிளின் உரிமையாளரே அதை தேடி கண்டுபிடித்தார்.
பெருந்துறையில் திருடிய சைக்கிளை நிறுத்தத்தில் விட்டுவிட்டு திருடன் தப்பினான். சைக்கிளின் உரிமையாளரே அதை தேடி கண்டுபிடித்தார்.
சைக்கிள் திருட்டு
பெருந்துறை நால்ரோடு சந்திப்பு அருகே துணிக்கடை வைத்து நடத்தி வருபவர் ஜானிபாட்சா (வயது 72). இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஜானிபாட்சா கடந்த 8-ந்தேதி இரவு தனது சைக்கிளை பூட்டுப்போட்டு பூட்டி, வழக்கம்போல தனது கடைக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் கடைக்கு வெளியே வந்து பார்த்த போது அவரது சைக்கிளை காணவில்லை. யாரோ மர்மநபர் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.
நிறுத்தத்தில் சைக்கிள் விடப்பட்டது
இதைத்தொடர்ந்து அவரது சைக்கிளை தேடி பார்த்து வந்தார். அப்போது அவரது சைக்கிள் பெருந்துறை பஸ் நிலையம் எதிரே உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தார். இதையடுத்து சைக்கிள் நிறுத்த உரிமையாளரிடம் அவர், தனது திருட்டு போன சைக்கிள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே டோக்கன் கொடுத்து சைக்கிளை எடுக்க வரும் நபரை பிடித்து போலீசாரிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஜானிபாட்சா போலீசாரிடமும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசாரும் அங்கு சென்று சைக்கிள் நிறுத்த நிர்வாகியிடம், சைக்கிள் திருடன் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மறுநாள் ஜானிபாட்சா சைக்கிள் நிறுத்தத்துக்கு சென்று, தனது சைக்கிள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்த்துள்ளார்.
பூட்டுப்போட்டு பூட்டினார்
ஆனால் சைக்கிள் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சைக்கிள் நிறுத்த நிர்வாகியிடம் கேட்டபோது அவர், சொந்த வாகனமா அல்லது திருட்டு வாகனமா என்றெல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம். டோக்கன் கொடுப்பவரிடம் வாகனத்தை ஒப்படைப்பது தான் எங்கள் பொறுப்பு என்றார்.
இதனால் ஜானிபாட்சா அருகே உள்ள சைக்கிள் நிறுத்தத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஜானிபாட்சா சைக்கிள் நிறுத்த நிர்வாகியிடம் கூறி, தனது சைக்கிளை சங்கிலியால் பூட்டுப்போட்டு பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
போலீசார் தன்னை தேடுவதை அறிந்்து சைக்கிளை விட்ட மர்மநபர் ஒரு வாரம் கடந்தும் சைக்கிளை எடுக்க அங்கு வரவில்லை. இதையடுத்து ஜானிபாட்சாவை அந்த சைக்கிள் நிறுத்த உரிமையாளர் வரவழைத்து அவரது சைக்கிளை அவரிடமே நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.
சைக்கிளை திருடி நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.