சாமியானா பந்தல் கடை உரிமையாளர் தற்கொலை

சாமியானா பந்தல் கடை உரிமையாளர் தற்கொலை;

Update: 2021-10-27 14:46 GMT
சாமியானா பந்தல் கடை உரிமையாளர் தற்கொலை
கணபதி

கோவை கணபதி கே.கே. நகர் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55).இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இவர் அதே பகுதியில் ஸ்ரீ சாய் சாமியானா என்ற பெயரில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் காந்தி மாநகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். 

இந்த கோவில் கமிட்டியில் வெங்கடேசனின் அக்கா ரத்னாவின் மகன்கள் சண்முககுமார் மற்றும் கர்ணன் ஆகியோரும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு கோவில் கமிட்டியில் வெங்கடேசனின் நடவடிக்கை சரியில்லை என கூறி கமிட்டியில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.இந்நிலையில் நேற்று தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். 

அதில் என் இறப்புக்கு காரணம் எனது அக்கா மகன் கர்ணன் மற்றும் சண்முககுமார் என்று கூறி அந்த வீடியோ பதிவை உலகளந்த பெருமாள் கோவில் கமிட்டி குழுவுக்கு வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்டு விட்டு தான் நடத்திவரும் ஸ்ரீ சாய் சாமியானா கடைக்கு வந்தார்.
பின்னர் யாரும் இல்லாத நேரம் பார்த்து கடைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதனை அறிந்த சாமியானா கடை அருகில் குடியிருக்கும் தாமஸ் என்பவர் வெங்கடேசனின்குடும்பத்திற்கும், சரவணம்பட்டி   போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து  வெங்கடேசன் தற்கொலைக்கு காரணம் என்ன? அவரது வீடியோ பதிவில் கூறப்பட்டது உண்மையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்