விநாயகன் யானையை பிடிக்கக்கோரி ஸ்ரீமதுரை, முதுமலை மக்கள் ஊர்வலம்

கூடலூர் அருகே விநாயகன் யானையை பிடிக்கக்கோரி ஸ்ரீமதுரை, முதுமலை மக்கள் ஊர்வலம் சென்றனர்.;

Update: 2021-10-27 14:01 GMT
கூடலூர்

கூடலூர் அருகே விநாயகன் யானையை பிடிக்கக்கோரி ஸ்ரீமதுரை, முதுமலை மக்கள் ஊர்வலம் சென்றனர்.

தொடர் அட்டகாசம்

கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களில் விநாயகன் என்ற  காட்டுயானை புகுந்து, தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அதை பிடித்து முதுமலையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

எனினும் விநாயகன் யானை ஊருக்குள் வராமல் தடுக்க 6 கும்கி யானைகள், 30 ஊழியர்களை கொண்டு வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விநாயகன் யானை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கிறது.

ஊர்வலம்

இந்த நிலையில் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மண்வயல் பஜாரில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது பெரும்பாலானவர்கள் விநாயகன் யானையை உடனடியாக பிடிக்க வேண்டும், இல்லையெனில் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகன் யானையை பிடிக்க வேண்டும், சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்வயலில் ஊர்வலம் சென்றனர். 

ஆர்ப்பாட்டம்

மேலும் வனத்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அங்குள்ள பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு, பா.ஜனதா போன்ற அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, விநாயகன் யானையை பிடிக்காவிட்டால் அனைத்து கிராம மக்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்