கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 3-வது ஆலைக்கு 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்
40 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் 3-வது புதிய ஆலைக்கு நெம்மேலி-பேரூர் பகுதியில் 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு பலகையை அமைத்துள்ளது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ஏற்கனவே உள்ள கடல் நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் ஆலைக்கு பக்கத்தில் நெம்மேலி-பேரூர் சாலையில் இந்து சமய அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தில் தினமும் 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக உற்பத்தி செய்யும் ஆலையை ரூ.6,078 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அமைக்க உள்ளது.
இதற்காக தற்போது நெம்மேலி-பேரூர் சாலையில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலங்கள் 2046-ம் ஆண்டு வரை குத்தகை அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியம் பெற்றுள்ளது. அதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.7.33 கோடியை வாடகை தொகையாக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு, குடிநீர் வாரியம் வழங்கியுள்ளது.
இதற்காக சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகங்கள் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்தம் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது சென்னை குடிநீர் வடிகால் வாரியம் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. தினமும் 40 கோடி லிட்டர் (400 மில்லியன் லிட்டர்) கடல் நீர் குடிநீராக சுத்திகரிக்கும் 3-வது குடிநீர் ஆலைக்கு நெம்மேலி-பேரூர் சாலையில் சவுக்கு தோப்புகள் உள்ள 90 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்தி அந்த நிலத்தில் வெளிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அதில் ஊடுருவாத வண்ணம் தகவல் பலகை அமைத்துள்ளது. 3-வது புதிய குடிநீர் ஆலை பணிக்காக நெம்மேலி-பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் 90 ஏக்கர் நிலத்தில் உள்ள சவுக்கு மரங்கள் விரைவில் அகற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.