யானைக்கவுனி பாலம் அருகே குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி: குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தம்

யானைக்கவுனி பாலம் அருகே குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணியில் குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2021-10-27 04:49 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையால் சென்னை வால்டாக்ஸ் ரோடு யானைக்கவுனி பாலம் அருகே வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள், சென்னை குடிநீர் வாரியத்தால் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த பணி 27-ந்தேதி (இன்று) காலை 9 மணி முதல் 28-ந்தேதி (நாளை) காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. எனவே எழும்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளை, பார்க்டவுன், ஜார்ஜ்டவுன், சவுகார்பேட்டை, வேப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தப்பட உள்ளது.

இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ராயபுரம் பகுதி பொறியாளரை 8144930905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்