தெப்பக்குளத்தில் மூழ்கி டீக்கடைக்காரர் சாவு
தக்கலையில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்ற போது டீக்கடைக்காரர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பத்மநாபபுரம்:
தக்கலையில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்ற போது டீக்கடைக்காரர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
டீக்கடைக்காரர்
தக்கலை காமராஜர் பஸ்நிலையம் பின்புறம் ராமன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 56), இவர் தக்கலை போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள பத்மநாபபுரம் நகராட்சி வணிகவளாகத்தில் டீ கடை நடத்திவந்தார்.
இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தங்கசாமி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தக்கலை பேலஸ்ரோடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிட்டு வருவது வழக்கம்.
சாவு
அதே போல் நேற்று மாலை தங்கசாமி தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார். வெகுநேரமாகியும் அவர் கடைக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பெருமாள்கோவிலுக்கு சென்று தேடி பார்த்தனர்.
அப்போது கோவில் தெப்பக்குளத்தின் கரையில் தங்கசாமி துணிகள், செருப்பு ஆகியவை இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்து, குளத்தில் இறங்கி தேடினார்கள். அப்போது தெப்பக்குளத்தில் மூழ்கி தங்கசாமி இறந்தது தெரிய வந்தது. உடனே உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.