‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-26 21:25 GMT
சாலை சீரமைக்கப்பட்டது

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் தாதகாப்பட்டி கேட் முதல் பில்லுக்கடை பஸ் நிலையம் வரையில் உள்ள சாலையில் குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்தது. இதுதொடா்பாக கடந்த 28-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் துரித நடவடிக்கையில் இறங்கினர். இதனால் சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-மணிகண்டன், சேலம்.

பகலிலும் எரியும் மின்விளக்கு

தர்மபுரி மாவட்டம் பெரிய வத்தலாபுரத்தில் அமைந்துள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பல நாட்களாக மின்விளக்குகள் அணைக்கப்படாமல் எரிந்த படியே உள்ளது. இதனால் தேவையில்லாமல் மின்சாரம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் மட்டும் மின்விளக்கை எரியச் செய்யவேண்டும்.

-ஊர்மக்கள், பெரிய வத்தலாபுரம், தர்மபுரி.

போலீசார் நடவடிக்கை தேவை

சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காசக்காரனூரில் பொதுக்கழிப்பிடம் பின்புறம் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடக்கிறது. இதனால் பொதுக்கழிப்பிடத்துக்கு வர பெண்கள் தயங்குகின்றனர். எனவே இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், காசக்காரனூர், சேலம்.

பள்ளி வளாகத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சி சிகரலஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மின்கம்பம் ஒன்று பள்ளிக்கூட சுவரில் விழுந்து கிடக்கிறது. இதனால் பள்ளியின் சுற்றுச்சுவரும் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் அந்த மின்கம்பம் அப்படியே கிடக்கிறது. வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஊர்மக்கள், சிகரலஅள்ளி, தர்மபுரி.

பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ் நிலையத்தின் உள்ளே இரு சக்கர வாகனங்களும், கார்களும் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கரத்தினம், பள்ளப்பட்டி, சேலம்.

பாலத்தில் தேங்கும் மழைநீர்

சேலம் காளிப்பட்டி- வைகுந்தம் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

-ஊர்மக்கள், காளிப்பட்டி, சேலம்.

நோய் பரவும் அபாயம்

சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி தொல்லை கொடுக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ஊர்மக்கள், ரத்தினசாமிபுரம், சேலம்.

சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி பஞ்சாயத்து 8-வது வார்டில் சரியான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் மழைநீரும் கலந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆண்டிபட்டி, சேலம்.

சேறும், சகதியுமான சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பி.ஆயிபாளையம் பஞ்சாயத்து ரோடு சேதமடைந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. புதிய சாலை அமைக்க சொல்லி பல முறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலம் என்பதால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், பி.ஆயிபாளையம், நாமக்கல்.

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

தர்மபுரி மாவட்டம் சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் கீழ்வீதியில் குப்பை கிடங்கு உள்ளது. ஆனால் குப்பைகளை கொண்டு வரும் பணியாளர்கள், அந்த குப்பைகளை அங்குள்ள சாலையில் கொட்டி விடுகின்றனர். இதனால் அந்த பகுதி சுகாதார கேடாக காட்சி அளிப்பதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

-மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்