மகன்-மகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை
கலபுரகியில், கணவரின் கள்ளத்தொடர்பால் மனமுடைந்த பெண், மகன்-மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
கள்ளக்காதல்
கலபுரகி டவுன் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பஞ்சகர்மா நகர் பகுதியில் வசித்து வந்தவர் தீக்ஷா சர்மா (வயது 27). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. தீக்ஷாவுக்கு, தனஞ்ஜெய் (4), சிஞ்சனா (2) என்ற 2 பிள்ளைகள் உண்டு. இந்த நிலையில் தீக்ஷாவின் கணவருக்கும், பஞ்சகர்மா நகரில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் வீட்டிற்கு தீக்ஷாவின் கணவர் அடிக்கடி சென்று வந்து உள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த தீக்ஷா, பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதலை கைவிட தீக்ஷாவின் கணவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
தற்கொலை
மேலும் தீக்ஷாவை அவரது மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் அடித்து, உதைத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனம் உடைந்த தீக்ஷா, 2 பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.
அதன்படி நேற்று காலை வீட்டில் விளையாடி கொண்டு இருந்த தனஞ்ஜெய், சிஞ்சனா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த தீக்ஷா தானும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் 3 பேர் மீதும் தீ பரவி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் 3 பேரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேர் மீது பிடித்த தீயை அணைத்தனர். பின்னர் 3 பேரையும் சிகிச்சைக்காக கலபுரகி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தீக்ஷாவும், சிஞ்சனாவும் இறந்தனர். படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தனஞ்ஜெய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தீக்ஷாவின் கணவர், மாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கலபுரகியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.