கார்வாரில் ரூ.5 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் - 2 பேர் கைது

கார்வார் அருகே விற்பனை செய்ய முயன்ற ரூ.5 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-10-26 21:21 GMT
பெங்களூரு:

திமிங்கல உமிழ்நீர்

  கர்நாடகத்தில் சமீபகாலமாக திமிங்கல உமிழ்நீர் விற்பனை செய்யப்படுவதும், அதை விற்பனை செய்பவர்களும் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. திமிங்கல உமிழ்நீர் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் திமிங்கல உமிழ்நீரின் விலையும் அதிகம் ஆகும்.

  இந்த நிலையில் கடலோர மாவட்டமான உத்தர கன்னடா (கார்வார்) மாவட்டம் சிர்சி பகுதியில் சிலர் திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக சிர்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.நாயக்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவி டி.நாயக், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமசந்திர நாயக் ரோந்து சென்றனர்.

ரூ.5 கோடி மதிப்பு

  அப்போது சிர்சி பஸ் நிலையம் அருகே சந்தேகம்படும்படியாக சுற்றிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெலகாவியை சேர்ந்த சந்தோஷ் காமத், சிர்சியை சேர்ந்த ராஜேஸ் நாயக் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய காத்து நின்றதும் தெரிந்தது.

  இதனால் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் அதன்மதிப்பு ரூ.5 கோடி ஆகும். கைதான 2 பேர் மீதும் சிர்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு எங்கிருந்து திமிங்கல உமிழ்நீர் கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்