பா.ஜனதா ஆட்சிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என பசவராஜ் பொம்மைக்கு ஆசிர்வாதம் வழங்கினேன் - தேவேகவுடா பரபரப்பு பேட்டி

பா.ஜனதா ஆட்சிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என பசவராஜ் பொம்மைக்கு ஆசிா்வாதம் வழங்கினேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-26 21:07 GMT
பெங்களூரு:

  விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பசவராஜ் பொம்மைக்கு ஆசிர்வாதம்

  நான் எந்த ஒரு தேர்தலையும், சிந்தகியில் நடைபெறும் இடைத்தேர்தலை போல தீவிரமாக எடுத்து கொண்டது கிடையாது. சிந்தகி ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து தொகுதியிலேயே முகாமிட்டு கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

  முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பின்பு, பா.ஜனதா மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் நான் கூறுவதில்லை என்று கேட்கிறீர்கள். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியான பின்பு எனது வீட்டுக்கு வருகை தந்தார். எனக்கு தந்தை, தாய் இல்லை. நீங்களே எனக்கு தந்தையும், தாயுமாக இருந்து ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொந்தரவு கொடுக்க மாட்டேன்

  எனது காலிலும், என்னுடைய மனைவி காலிலும் விழுந்து பசவராஜ் பொம்மை ஆசிர்வாதம் வாங்கினார். அப்போது அவருக்கு நான் ஆசிர்வாதம் வழங்கினேன். இந்த முதல்-மந்திரி பதவி கிடைக்க காரணமாக இருந்த எடியூரப்பாவுடன் சேர்ந்து ஒற்றுமையாக பணியாற்றும்படியும், பா.ஜனதா மேலிட தலைவர்களை அனுசரித்து ஆட்சி செய்யும்படியும் கூறினேன்.

  மேலும் இன்னும் 2 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி இருக்கிறது. அதுவரை முதல்-மந்திரியாக பதவியில் பசவராஜ் பொம்மை இருப்பாா். இந்த 2 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சிக்கு எந்த விதமான தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்க எனக்கும் காலஅவகாசம் தேவைப்படுகிறது. பசவராஜ் பொம்மைக்கு ஆசிர்வாதம் கொடுத்தபடி நடந்து கொள்வேன். நான் எதையும் மறைத்து பேசுபவன் இல்லை.

வேதனை அளிக்கிறது

  ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் பி அணி என்று சொல்கிறார்கள். பா.ஜனதாவின் ஏஜென்ட் என்று என்னை சொல்கிறார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறுவதற்காக, ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் மட்டும் இதுபோன்று விலைவாசி ஏற்பட்டது இல்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் விலைவாசி உயர்வு பிரச்சினை இருந்திருக்கிறது.

   விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சி மதசார்பற்றது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஜனதாதளம் (எஸ்) மதசார்பற்ற கட்சி இல்லை என்று சித்தராமையா கூறி இருக்கிறார். மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சிவசேனாவுடன் தான் கூட்டணி அமைத்திருக்கிறது. அதுபற்றி சித்தராமையா என்ன சொல்ல போகிறார். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தது பார்க்க வேண்டும்.
  இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்