குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
உடுமலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் திருட்டு, குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
உடுமலை
உடுமலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் திருட்டு, குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
நெருங்கும் தீபாவளி
தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பொதுமக்கள் ஜவுளிஉள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து பஸ்களில் உடுமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.அதனால் பஸ்கள் மற்றும் பஸ் நிலையம், ஆங்காங்குள்ளபஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திருடர்கள் புகுந்து பொதுமக்கள் வைத்துள்ள பொருட்களை திருடிச்செல்வதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலையில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அதன்படிஉடுமலை மத்திய பஸ் நிலையத்தில்நேற்று விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தலைமை தாங்கி பேசும்போது “ சிலர் உங்களிடம் உள்ள பொருட்களை திருடுவதற்காக, கீழே பணம் கிடக்கிறது என்று கூறி உங்களது கவனத்தை திசைதிருப்பக்கூடும். அவ்வாறு யாராவது கூறினால் ஏமாறாமல் விழிப்புடன் இருங்கள். சந்தேகப்படும்படியான நபர்களைக்கண்டால் உடனடியாக போலீசுக்கு தெரிவியுங்கள்” என்றார்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாகண்ணன் (சட்டம், ஒழுங்கு), எஸ்.வி.சுஜாதா (குற்றப்பிரிவு), வெங்கடேசன் (போக்குவரத்துப்பிரிவு) ஆகியோரும் பேசினர்.குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தைய்யா, போலீசார், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ் பயணிகள் ஆகியோர்கலந்து கொண்டனர்.
துண்டு பிரசுரம்
அத்துடன் பொதுமக்களிடமும் மற்றும் கடைகள், நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவிக்கு காவல்துறை அவசர உதவி எண் 100 அல்லது காவலன் SOS செயலியை பயன்படுத்தலாம். ஏதாவது குற்ற சம்பவம் நடைபெற்றாலோ, சந்தேக நபர்களை கண்டாலோ அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து உடுமலை காவல் நிலைய வாட்ஸ்அப் எண் 9498101345 மற்றும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாட்ஸ்அப் எண் 9498101323ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது