மது கூடத்திற்கு அனுமதிக்க கூடாது
இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் மது கூடத்தை திறக்க அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் அனு அளித்தனர்.
விருதுநகர்,
வெம்பக்கோட்டை தாலுகா அன்னபூரணியாபுரம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை வெள்ளைச்சாமி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊர் ஆலங்குளம் செவல்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. செவல்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்தது. சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் சுமுகமாக வாழ்ந்து வருகிறோம். மேலும் செவல்பட்டி ஆலங்குளம் மெயின் ரோட்டில் எங்களுக்கு பாத்தியப்பட்ட மாடசாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் ஐ.டி.ஐ. உள்ளது. இதற்கு நடுவில் சுமார் 10 மீட்டர் இடைவெளியில் தனியார் மதுக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நாங்கள் ஏற்கனவே இருமுறை அனைவரும் நேரில் மனு கொடுத்துள்ளோம். அதன்பேரில் மேற்படி மதுக்கூடம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது அதே இடத்தில் மதுக்கூடம் அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனால் எங்களுக்கு தேவையில்லாத இடையூறுகளும், இன்னல்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. எனவே மேற்படி தனியார் மதுக்கூடம் அமையாமல் இருக்க தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அவ்வாறு அனுமதி வழங்கினால் அதை எதிர்த்து பொதுமக்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தும் நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.