காரில் கடத்தப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பல்லடம் அருகே, காரில் கடத்தப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பல்லடம்
பல்லடம் அருகே, காரில் கடத்தப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்
பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு அருகே காரில் புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கணபதிபாளையம்- உகாயனூர் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு காரை போலீசார் சோதனையிட்டனர். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பரத் (வயது 24), மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த அம்ராராம் (21) மற்றும் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஏ.பி. நகரில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் மேலகாட்டான் குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (33), என்பதும், இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இ்ருந்து சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 140 கிலோ புகையிலைப் பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ரொக்கம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.