காரியாபட்டி பகுதியில் பலத்த மழை
காரியாபட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
மழைநீர் சூழ்ந்தது
காரியாபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் பாம்பாட்டி ஊராட்சி, பணிக்கனேந்தல் கிராமத்தில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது.
இந்த மழை நீர் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வாருகால் முற்றிலும் இடிந்துள்ளது. மழைநீர் வெளியே செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் காரியாபட்டி தாலுகா அரியனேந்தல் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சத்திரம்புளியங்குளம் கால்வாயில் அதிக தண்ணீர் சென்றதில் இந்த குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொருள்கள் முழுவதும் நனைந்து சேதமானது.
அரசு பள்ளி
இரவு நேரம் என்பதால் வீடுகளுக்குள் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்து சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், யூனியன் தலைவர் முத்துமாரி, காரியாபட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், தாசில்தார் தனக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் சென்று உடனடியாக அவர்களை மீட்டு மந்திரி ஓடை அரசு பள்ளியில் தங்க வைத்து உணவுகள் வழங்கப்பட்டது.
மேலும் காரியாபட்டி நகர செயலாளர் செந்தில் மக்களை சந்தித்து தேவையான உதவிகளை வழங்க அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.
பணிக்கனேந்தல் பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் இடிந்த கால்வாய் தூர்வாரப்பட்டும், ஏ.நெடுங்குளம் கண்மாய்க்கு செல்லும் மடையில் இருந்த அடைப்புகளையும் அகற்றி துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.