கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு வார்டு அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் சிறுவன் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-26 18:50 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு சிறுவன் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் ஈச்சங்காட்டை சேர்ந்த 31 வயது பெண், வரக்கால்பட்டை சேர்ந்த 27 வயது வாலிபர், விருத்தாசலம் அடுத்த வடக்கிருப்பை சேர்ந்த 30 வயது நபர், கீழ்மாம்பட்டை சேர்ந்த 30 வயது பெண், குறிஞ்சிப்பாடி அடுத்த மேலபுதுப்பேட்டையை சேர்ந்த 20 வயது வாலிபர், கடலூரை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது நேற்று உறுதியானது.

20 படுக்கைகள்

இதையடுத்து அவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 11 வயது சிறுவன் மட்டும் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். மற்ற 5 பேரும் காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், தனி வார்டு அமைக்க கண்காணிப்பாளர் சாய்லீலா ஏற்பாடு செய்தார்.
அதன்படி 20 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் உடனே டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்