கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 1 ந் தேதி 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 1 ந் தேதி முதல் 931 பள்ளிக்கூடங்களில் 1 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
931 பள்ளிக்கூடங்கள்
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் வருகிற 1-ந் தேதி அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 522 அரசு தொடக்கப் பள்ளிகள், 72 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், 105 தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப் பள்ளிகள், 203 அரசு நடுநிலைப் பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், 11 தனியார் மற்றும் சுயநிதி நடு நிலைப் பள்ளிகள் எனமொத்தம் 931 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் வருகிற 1-ந் தேதி தொடங்க உள்ளன.
விழிப்புணர்வு
இந்த பள்ளிகளுக்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பு பணியினை மேற்கொள்வார்கள். மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளிகளில் கிருமிநாசினி மற்றும் தூய்மை பணியினை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வருகைபுரியும் மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை அவ்வப்பொழுது சுத்தம் செய்திடவும், மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய ஆசிரியர்கள் விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.
தனித்தனி இருக்கைகள்
பள்ளிகளில் மாணவர்களுக்கு 6 அடி இடைவெளியுடன் தனித்தனியாக இருக்கைகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சென்று வர போதிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் குமரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கார்த்திகா, சிவராமன், சுப்பிரமணியன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் செந்தில்குமார், பிரபாகரன், சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.