கரூர் கலெக்டருக்கு தலைமை செயலாளர் பாராட்டு
மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து கோரிக்கை வைத்த பெண்ணுக்கு 1 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்த கரூர் கலெக்டருக்கு தலைமை செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் (வயது 29) வந்து கோரிக்கை மனு அளித்தார். அதில், தனது மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி என்றும், தான் கணவரால் கைவிடப்பட்டவர் என்றும், வசிக்க வீடு இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இவரின் நிலை உணர்ந்த கலெக்டர், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் உத்தரவின்படி அந்த பெண்ணுக்கு காந்தி கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சாய்தள வசதியுடன் வீடு ஒதுக்கி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 1 மணி நேரத்திற்குள் பயனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். மேலும், குடியிருப்பிற்கு பயனாளி செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாக தெரிவித்தார். அதனடிப்படையில் 1 மணி நேரத்தில் அந்தப்பெண்ணுக்கு ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரின் நடவடிக்கையை அறிந்து அவரை பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து அப்பெண்ணிற்கும், அவரது உடல் ஊனமுற்ற மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாக பணியை நான் மனதார பாராட்டுகிறேன்.
தங்களின் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.