மனைவியை தாக்கியவர் கைது

சிவகாசியில் மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 18:46 GMT
சிவகாசி, 
தென்காசி மாவட்டம் குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் திருமலை (வயது 32). இவருக்கும் சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டியை சேர்ந்த அமீனா (32) என்பவருக்கும் கடந்த 1 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. விவசாய கூலி வேலை செய்து வந்த திருமலைக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் அமீனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமீனா தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து அமீனாவின் உறவினர்கள் அமீனாவை ஊராம்பட்டிக்கு அழைத்து வந்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை, அமீனாவின் வீட்டுக்கு வந்து அங்கு தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவர் கொண்டு வந்த அரிவாளை கொண்டு மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அரிவாள் கையில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமீனா மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்