வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் தீ விபத்து
வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் புத்தகங்கள், மேசைகள் எரிந்து நாசமானது.
வேலூர்
வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் புத்தகங்கள், மேசைகள் எரிந்து நாசமானது.
கல்லூரியில் தீ விபத்து
வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்ளது. விளையாட்டு மைதானத்தின் அருகே பி.பி.ஏ. பிரிவு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள ஆசிரியர்களின் அறையில் புத்தகங்கள், மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் மற்றும் மேஜை நாற்காலிகள் வைத்திருந்தனர்.
நேற்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் அந்த அறையின் அருகே உள்ள வகுப்பறைக்கு சென்றனர். அப்போது அந்த அறையில் இருந்து புகை வந்தது. அவர்கள் உள்ளே பார்த்தபோது அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பேராசிரியர்களுக்கும், கல்லூரி ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
புத்தகங்கள் எரிந்து நாசம்
அதைத்தொடர்ந்து கல்லூரி தரப்பில் தண்ணீர் கொண்டு தீ அணைக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேசைகள், புத்தகங்கள், ஆய்வு கட்டுரைகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மர்மநபர்கள் கைவரிசையா?
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் பின்புறம் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் எளிதாக கல்லூரியின் உள்ளே வந்து விடலாம். மர்மநபர்களின் கைவரிசையாக கூட இருக்கலாம். கட்டிடப்பகுதியில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. சுற்றுச்சுவர் முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றனர்.