வேலூரில் லாரியில் கடத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
லாரியில் கடத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்;
வேலூர்
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பில்டர்பெட்ரோடு பகுதிகளில் உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள், கடைகளில் முககவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் இருந்து பொருள்கள் இறக்கி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் லாரியை ஆய்வு செய்தனர்.
அதில் சுமார் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னையில் இருந்து லாரி வந்துள்ளது. பிளாஸ்டிக் மூட்டைகளில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. வேலூரில் சில பொருட்களை இறக்கிவிட்டு லாரி சித்தூர் செல்வதாக தயார் நிலையில் இருந்துள்ளது. வேலூரில் உள்ள கடைகளுக்கும் அவர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வினியோகம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.