கற்கால மக்கள் வரைந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

வேட்டவலம் அருகே கற்கால மக்கள் வரைந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-26 17:06 GMT
திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே கற்கால மக்கள் வரைந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாறை ஓவியங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் பாறை ஓவியங்கள் உள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் பாரதிராஜா, சீனுவாசன், கரண்குமார் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், பழனிசாமி, முனைவர் சுதாகர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். 

வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் கிழக்குப்பகுதி குன்றுகளில் உள்ள கோனைக்கல் பாறை ஒன்றில் மேற்கு பக்கத்தில் பாறை ஓவியத் தொகுதி காணப்படுகின்றன. 

இந்த பாறை ஓவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:- 

வெள்ளைநிற ஓவியத்தில் முதல் பகுதியில் பல்லக்கு அல்லது வீடு போன்ற ஒன்றில் மனித உருவம் நின்ற நிலையில் இருப்பது போல உள்ளது.

மேல் இருபுறமும் மூங்கில் போன்ற கம்புகளில் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தது போல உள்ளது. பின்புறம் 2 பேர் தூக்கிச்செல்வது போல காட்டப்பட்டுள்ளது. 

முன்புறம் ஒரு உருவம் தெரிகின்றது. இதற்கு முன்னால் நாயின் உருவம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. ஒரு வேளை இனக்குழு தலைவனின் இறப்புக்குப்பின் நடக்கும் நிகழ்வாக இருக்கக்கூடும். 

இதுபோன்ற பல்லக்கில் தூக்கிச்செல்லும் காட்சிகள் ஏற்கனவே சிஷ்பாறை ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

வட்ட வடிவில் உருவம்

வலப்புறம் உள்ள ஓவியம் செஞ்சாந்து நிறத்தில் 2 வட்ட வடிவில் உருவம் காணப்படுகிறது. இதில், ஒன்று உடலின் மேற்பகுதி மார்புடனும், தனித்த இடத்தில் தலையும் உள்ளது. 
இந்த ஓவியத்தின் உள்ளே வெந்தய நிறத்தில் ஒரு உருவம் வரையப்பட்டுள்ளது. இது உள்ளுறுப்பாக இருக்கலாம்.

 மற்றொரு ஓவியம் செஞ்சாந்து நிறத்தில் நீண்ட விலங்கு உருவத்தின் மேற்பகுதி வால்போன்றும், அருகில் ஒரு மனித உருவமும் காணப்படுகிறது. 

நெய்வாநத்தம் கிராமத்தில் தொப்பிதூக்கி கல் உள்ள மலைக்குன்றில் பெரிய பாறையின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் 4 உருவங்கள் வரையப்பட்டுள்ளன. 

அதில் 2 உருவம் மனித உருவத்தை ஒத்த வடிவத்தில் உள்ளது. இதன் தலை வட்டமாகவும், மூக்கு நீண்டு பக்கவாட்டுத் தோற்றத்தில் இருப்பது போல உள்ளது. 

விரிந்த நிலையில் உள்ள கையில் வாள் போன்ற ஆயுதம் ஏந்தி இருப்பது போல உள்ளது. மறு கை விரிந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. 
தலையின் பின்புறம் வட்ட வடிவம் ஒன்று உள்ளது. இது வழிபாட்டுக்கு ஆன உருவமாகவும் இருக்கலாம்.

மனித உருவம்

மற்றொரு ஓவியத்தில் மனித உருவம் ஒன்று உள்ளது. அதன் இடது கையில் வில் போன்ற ஆயுதமும், மற்றொரு கையில் அம்பு போல ஒன்றை வைத்திருப்பது போல காணப்படுகின்றது. 

தலையில் வட்ட வடிவ கோடு உள்ளது. அவனது பின்புறம் விலங்கின் உருவம் பாதியாக தெரிகின்றது. அவ்விலங்கின் கால்கள் மேல்புறம் இருப்பது போல உள்ளது. 

இதைக்காணும் போது வேட்டையாடிய விலங்கினை முதுகில் தூக்கிச்செல்வது போல உள்ளது. மனித உருவத்தின் கீழ் பகுதி மங்கிவிட்டது. மற்றொரு ஓவியம் படகு போன்ற வடிவத்தில் உள்ளது. 

 கற்கால மனிதர்கள்

வேட்டவலம் பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்றில் தொடர்ந்து பல பாறை ஓவியங்கள் அண்மைக்காலமாக கிடைத்து வருகின்றன. 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் செழிப்பாக இருந்தமைக்கான குறியீடுகள் இந்த ஒவியங்கள் மூலம் தெரியவருகின்றன.

கற்கால மனிதர்களின் கற்பனைத்திறன், சிந்தனையை வெளிப்படுத்தும் தன்மை, பழக்கப்படுத்திய விலங்குகள், பொருட்கள் என கற்கால மனிதர்களின் பண்பாட்டு கூறுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. 

மனித நாகரிக வளர்ச்சியில் அறுபடாத வரலாற்று சுவடுகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கிடைத்து வருகின்றன. 

தொல்லியல், மானுடவியல், கலைக்கோட்பாடுகள் என புதிய ஆய்வுகளுக்கு இந்த ஓவியங்களின் கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றுவதாக தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஓவியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த தொல்லியல் துறை முன்வரவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்