நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 லட்சம் மோசடி
தேனி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியர்கள் புகார் மனு கொடுத்தனர்.
தேனி:
நிதி நிறுவனம் மோசடி
தேனி மாவட்டத்தில் செயல்பட்ட ஒரு தனியார் நிதி நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகளும் வந்தனர்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரனிடம் நிதி நிறுவன ஊழியர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த நிதி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தில் 68 பேர் வேலை பார்த்தோம். இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் தனிநபர் கடன் திட்டத்தில் முன்பணம் செலுத்தினர். அந்த வகையில் மாவட்டத்தில் ரூ.60 லட்சம் வரை முன்பணமாக பொதுமக்களால் செலுத்தப்பட்டது. இதற்காக பணம் செலுத்திய மக்களுக்கு ரசீது வழங்கப்பட்டது.
தலைமறைவு
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து விட்டு நிதிநிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். களப்பணியாளர்களுக்கும் சம்பளம் தரவில்லை. பணம் கட்டிய பொதுமக்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் நாங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தோம். அந்த புகார் திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிடிபட்டார். அவரிடம் ரூ.3½ லட்சம், செல்போன், கணினி போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய மற்ற உரிமையாளர்களை தேடிக் கண்டுபிடிக்க போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய எங்களையும், பணம் செலுத்திய மக்களையும் ஏமாற்றி பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பணத்தையும், எங்களின் சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.