நாமக்கல் அருகே முட்டை அட்டை குடோனில் தீ விபத்து
நாமக்கல் அருகே முட்டை அட்டை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாமக்கல்:
முட்டை அட்டை குடோன்
நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை அருகே உள்ள குடோனில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் முட்டைகளை பேக்கிங் செய்வதற்கான அட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குடோனில் திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோழிப்பண்ணை தொழிலாளர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அட்டைகள் சேதம்
இதையடுத்து நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோனில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் ஒரு லோடு அட்டைகள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சேதமடைந்த பொருட்களின் தொகை எவ்வளவு? என்பது உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.