தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல்: விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை-நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
திருச்செங்கோடு அருகே தனியார் பள்ளி ஆசிரியையை கடத்திய விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்:
தனியார் பள்ளி ஆசிரியை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சன்னியாசிபட்டி உப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 29). விவசாயி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி ஆத்தூராம்பாளையத்தை சேர்ந்த 24 வயது நிரம்பிய தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை கட்டாய திருமணம் செய்வதற்காக வேனில் கடத்தி சென்றார்.
மேலும் பள்ளி ஆசிரியை மற்றும் அவருடைய தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியையின் உறவினர்கள் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சீனிவாசனிடம் இருந்து ஆசிரியையை பத்திரமாக மீட்டனர்.
10 ஆண்டு சிறை
இது தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சீனிவாசனை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.