கோழிகளுக்கு குடற்புண் ஏற்பட வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

கோழிகளுக்கு குடற்புண் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பண்ணையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-26 16:52 GMT
நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 15 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 20 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 60 சதவீதமாகவும், அதிகபட்சமாக 85 சதவீதமாகவும் இருக்கும்.
கோழிகளுக்கு குடற்புண்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோழிகளில் கிளாஸ்டிரிடியம் பாக்டீரியா மூலம் குடற்புண் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா கோழி கொட்டகையில் எச்சம், தீவனம் மற்றும் தூசி உள்ள அனைத்து இடங்களிலும் பரவி இருக்கிறது. இதுதவிர கோழிகளின் குடலிலும் இந்த பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
திடீரென தீவனத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது ரத்தக்கழிச்சல், பூஞ்சான நச்சுகள், குடற்புழுக்கள் போன்ற காரணங்களால் கோழிகளில் குடற்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
குடற்புழு நீக்கம்
எனவே தற்போது கோழிகளுக்கு கருவாடு, மீன், கோதுமை போன்ற தீவன பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். தரமான தீவன மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாட்டுக்கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
இதேபோல் வடகிழக்கு பருவமழை காலங்களில் இடி மற்றும் மின்னல் வர அதிகம் வாய்ப்பு உள்ளது. மந்தையாக மேயும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் மின்னல் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க அவைகளை மழை வரும் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. மேலும் கால்நடைகளை முள்கம்பி வேலி அல்லது மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்