வால்பாறையில் நடைபாதை கடைகள் அதிகரிப்பு

வால்பாறையில் நடைபாதை கடைகள் அதிகரிப்பு

Update: 2021-10-26 16:39 GMT
வால்பாறை

தீபாவளியை முன்னிட்டு வால்பாறையில் நடைபாதை கடைகள் அதிகரித்து உள்ளது. இதனால் வெளியூர் வியாபாரிகளை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

நடைபாதை கடைகள்

வால்பாறை நகரில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை உள்ள நடைபாதையில் நகராட்சி நிர்வாகத்தின் உரிய அனுமதியுடன் நடைபாதை கடைக்காரர்கள் கடை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் அனைவருக்கும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலை யில் வால்பாறை நகரில் கடந்த சில மாதங்களாகவே அனைத்து வகையான வியாபாரங்களை செய்வதற்காக வெளியூர்களில் இருந்து அதிகப்படியான வியாபாரிகள் வால்பாறை பகுதிக்கு வந்து சாலை ஓரத்திலும், நடைபாதைகளிலும் கடை நடத்தி வருகின்றனர். 

போக்குவரத்து நெரிசல்

இதனால் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபாதை கடை நடத்தி வரும் உள்ளூர் வியாபாரிகளின் வியாபாரங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நடைபாதை வியாபாரிகள் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

இந்தநிலையில் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகராட்சி நடைபாதையில் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் கடைகள் அமைக்கத் தொடங்கி உள்ளார்கள். மேலும் வியாபாரமும் மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளும் நடைபாதையில் கடைகளை போடுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வெளியூர் வியாபாரிகளை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்