ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-10-26 16:35 GMT
ராமேசுவரம், 
வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நல்ல மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை 9 மணியில் இருந்தே லேசாக மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணிக்கு பிறகு பலத்த மழையாக பெய்தது. சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாக பெய்தது.
பஸ் நிலையம் செல்லும் சாலை, ராம தீர்த்தம் முதல் சீதா தீர்த்தம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும் கடுமையாக அவதி அடைந்தனர்.  ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் உப கோவிலான லட்சுமணேசுவரர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள நாகநாதர் கோவிலை மழைநீர் சூழ்ந்து நின்றது. பின்னர் அந்த தண்ணீர், தெப்பக்குளத்தில் சென்று சேரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருள் சூழ்ந்தது போல்...
பாம்பன் பகுதியில் நேற்று பகலில்,  மாலை போல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன. இதனால் ரோடு பாலம் மற்றும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வந்தன. 
தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்