கோவை,
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்து உள்ள கோவையில் பசுமை நிறைந்த காடுகள் உள்ளன. இங்கு கழுகுகள், இரட்டைக்கிளவி, கிங் பிஷர் உள்பட பல்வேறு வகையான பறவைகள், ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நோயுற்ற மற்றும் காயமடைந்த பறவைகளை மீட்டு, அவற்றிற்கு சிகிச்சை அளித்து பாதுகாக்க கோவை கோட்ட வன அலுவலக வளாகத்தில் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் பறவைகள் மறுவாழ்வு மையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை கோட்ட வன அதிகாரி அசோக் குமார் கூறியதாவது:-
வீடுகளில் கிளிகள் உள்பட பல்வேறு பறவைகள் வளர்க்க தடை உள்ளது. இது தெரியாமல் பலர் வீடுகளில் கிளிகள் வளர்த்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து மீட்கப்படும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அந்த பறவைகள் மீண்டும் வனப்பகுதியில் விடப்படுகின்றன. தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் காயங்களுடன் மீட்கப்பட்ட கழுகு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கழுகு நல்ல நிலையில் உள்ளது.
இதுதவிர அரிய வகை எகிப்தியன் பிணந்திண்ணி கழுகு சூலூர் பகுதியில் மீட்கப்பட்டது. அதன் இறக்கை பகுதியில் காயம் உள்ளதால் பறக்க முடியாமல் உள்ளது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பறவைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் இங்கு பறவைகள் ஆஸ்பத்திரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பறவைகளுக்கான பிரேத்யேகமான எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை என அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த பறவைகளை பராமரித்து வரும் தன்னார்வலர் ஒருவர் கூறியதாவது:-
இந்த மறுவாழ்வு மையத்தில் தற்போது 100 கிளிகள், 4 மயில்கள், 7 புறாக்கள், 3 குயில்கள், 2 கழுகள், காகங்கள் என காயமடைந்த மற்றும் நோயுற்ற பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை வனத்துறை கால்நடை டாக்டர் அல்லது தன்னார்வ டாக்டர்கள் வந்து பறவைகளை பரிசோதிக்கின்றனர்.
தற்போது இந்த மையத்தில் ஒரு காகத்திற்கு செயற்கை கால் பொருத்தி உள்ளோம். மேலும் நோயுற்று இறக்கும் பறவைகளை எரிப்பதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக இங்கு தான் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் இது செயல்பாட்டுக்கு வந்தது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட பறவைகளின் உடல்கள் இங்கு எரியூட்டப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.