மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது ஸ்ரீவைகுண்டத்தில் 121 மி.மீ மழை பதிவு
ஸ்ரீவைகுண்டத்தில் 121 மி.மீ மழை பதிவு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 121 மி.மீ. மழை பதிவானது.
பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 113 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 58.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலையிலும் ஸ்ரீவைகுண்டத்தில் மழை பெய்தது.
மழை விவரம்
தூத்துக்குடியை பொறுத்தவரை அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. நேற்று மதியம் சிறிது நேரம் மழை பெய்தது. மற்றபடி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று மாலை 4 மணிவரை வைப்பாரில் 52 மில்லி மீட்டர், கயத்தார் 7 மில்லி மீட்டர், சாத்தான்குளம் 58.2 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 121 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.