மாவோயிஸ்டு முக்கிய தளபதி சரண்

மாவோயிஸ்டு முக்கிய தளபதி சரண்

Update: 2021-10-26 14:55 GMT
மாவோயிஸ்டு முக்கிய தளபதி சரண்
கோவை

3 மாநில எல்லையில் தளம் அமைத்து தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு முக்கிய தளபதி கேரள போலீசில் சரண் அடைந்தார். அவருக்கு  மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளை கேரள போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகள் தாக்குதல்

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, வயநாடு மாவட்டம் புல்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

 தண்டர்போல்ட் தேடுதல் வேட்டையில் துப்பாக்கி சண்டை நடைபெற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, நீலகிரி மாவட்டத்தில்  கூடலூர் ஆகிய  பகுதிகள் கேரள எல்லையில் உள்ளதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழக போலீஸ் சார்பில் நக்சலைட் தடுப்பு படையினரும் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வருகிறார்கள்.


சரண் அடைய வேண்டுகோள்

இந்தநிலையில் கேரள போலீஸ் சார்பில், மாவோயிஸ்டுகள் சரண் அடையும்படியும், சரண் அடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

 மாவோயிஸ்டுகளை சரண் அடைய வைக்கும் தனித்திட்டத்தையும் கேரள போலீசார் அறிவித்து இருந்தனர்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மாவோயிஸ்டுகள் சரண் அடையாமல் இருந்தனர்.

மாவோயிஸ்டு தளபதி சரண்

இந்த நிலையில் வயநாடு மாவட்டம், புல்பள்ளி பகுதியில், கேரளா, கர்நாடக, தமிழக எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் கபினி தளம் கமாண்டராக இருந்தவர் ராமு என்ற லிஜேஷ் (வயது35). இவர் நீண்டகாலமாக வனப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சி அளித்து, முக்கியமான தளபதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் சரண் அடையப்போவதாக கேரள தண்டர்போல்டு அதிகாரிகளுக்கு லிஜேஸ் தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து லிஜேஷ் சரண் அடைவதற்கான வாய்ப்புகளை கேரள போலீசார் ஏற்படுத்திக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து  வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் சுகுமார் முன்னிலையில் அவர், சரண் அடைந்தார். 

பின்னர் கேரள வடக்கு மண்டல ஐ.ஜி. அசோக் யாதவ்விடம் அவர் அழைத்துச்செல்லப் பட்டார். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் லிஜேஷ், "தான் சரண் அடைந்துவிட்டதாகவும், திருந்தி வாழப்போவதாகவும்" பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் சரண் அடைந்த அவருக்கு  மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளை கேரள போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிகாரிகள் முடிவு

கேரளாவில் மாவோயிஸ்டு தளபதி சரண் அடைந்து இருப்பது, அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டு தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் லிஜேஷ் அளிக்கும் தகவல் மூலம் எந்தந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கிறார்கள்? என்ற தகவலை சேகரித்து அவர்களை சரண் அடைய வைக்கவும், சரண் அடையாவிட்டால் தாக்குதல் நடத்தி பிடிக்கவும் கேரள தண்டர்போல்ட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-

மேலும் செய்திகள்