திருவள்ளூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வெல்டர் சாவு
திருவள்ளூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வெல்டர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை முதல் தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 24). வெல்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முருகேசன் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூர் ஜெ.என். சாலையான தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்த மாடு திடீரென அவரை முட்டியது.
இதில் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் முருகேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பஸ் டிரைவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.