தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு: உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை-மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை செய்துள்ளார்.
சேலம்:
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை செய்துள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு, தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் தரமானதாக தயாரித்து விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி பேசினார். தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடவடிக்கை
உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரும் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பொருட்கள் தயாரிப்புக்கு தரமான உணவு பொருட்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் வைத்தால் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லரை விற்பனை ஆகிய விவரங்களை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட ரசாயன பவுடர்களை பயன்படுத்தக்கூடாது. உணவு பொருட்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விற்பனையின்போது உணவு பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். உணவு பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்படம்
தரமற்ற எண்ணெய் மற்றும் பாக்கெட் அல்லது டின்களில் அடைக்கப்படாத எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நபர்கள் உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.