பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது; ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததில் தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததில் தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
பலத்த மழை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதன்படி பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மழை தூறியது.
சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. நள்ளிரவு 2 மணி வரை இடி-மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளம் ெபருக்கெடுத்து ஓடியதில் மழைநீர் செலம்பூர் அம்மன் கோவில் ஓடை வழியாக சென்று எண்ணமங்கலம் ஏரியில் கலந்தது. இதில் எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது.
வாழைகள் நாசம்
செலம்பூர் அம்மன் கோவில் ஓடையில் முறையாக தூர்வாரப்படாததால் கரையில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் அருகே உள்ள வாழை தோட்டத்துக்குள்ளும் புகுந்தது. இதனால் வாழைகள் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டும், சாய்ந்தும் சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செவ்வாழை, கதலி, மொந்தன், ரொபஸ்டா போன்ற வாழைகளை சாகுபடி செய்தோம். நன்கு வளர்ந்து இன்னும் 4 மாதங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் மழை தண்ணீர் புகுந்ததில் வாழைகள் அடித்து செல்லப்பட்டும், சாய்ந்தும் நாசமடைந்தன. 10-க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.