இடைத்தேர்தல் பிரசாரத்தால் அரசு பணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - பசவராஜ் பொம்மை பேட்டி
இடைத்தேர்தல் பிரசாரத்தால் அரசு பணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அனைத்து மந்திரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், மந்திரிகள் விதானசவுதாவுக்கு செல்லாததால், விதானசவுதாவுக்கு பூட்டுப்போடப்பட்டு இருப்பதாகவும், எந்த விதமான அரசு பணிகளும் நடைபெறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இதுகுறித்து சிந்தகியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அரசு பணிகளுக்கு பாதிப்பு...
மந்திரிகள் அனைவரும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இடைத்தேர்தல் பிரசாரம் காரணமாகவோ, பிற காரணங்களுக்காகவோ அரசு பணிகளில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு பணிகள் அனைத்தும் சரியான முறையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த ஒரு கட்சியையும் அழிக்க வேண்டும் என்று பா.ஜனதா நினைத்ததில்லை. எங்களது கட்சியின் கொள்கைப்படி செயல்படுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் சாதனை பற்றி பேசி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம்.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுப்பதாக மக்களிடையே தவறான தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் பரப்பி வருகின்றனர். பா.ஜனதா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.