தங்கும் விடுதி கழிவறையில் விஷ வாயு தாக்கி மருத்துவ மாணவி பரிதாப சாவு

மடிகேரியில் தங்கும் விடுதி கழிவறையில் விஷ வாயு தாக்கி மருத்துவ மாணவி பரிதாபமாக செத்தார். தோழிகளுடன் சுற்றுலா வந்தவருக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Update: 2021-10-25 20:15 GMT
பெங்களூரு:

5 மாணவிகள் சுற்றுலா வந்தனர்

  மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 5 மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனர். அவர்கள் மடிகேரி டவுனில் நியூ கூர்க் வேலி ஹேம்ஸ்டே எனும் தங்கும் இல்ல விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு, இரவில் வீடு திரும்பினர்.

  அப்போது அதில் ஒருவரான மும்பையை சேர்ந்த ஈஸ்வர் என்பவரின் மகளான விக்னேஸ்வரி (வயது 24) என்பவர் தங்கும் விடுதியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் பொருத்தியிருந்த தண்ணீரை சூடுபடுத்தும் எந்திரத்தில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவியுள்ளது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாவு

  அந்த வாயுவை சுவாசித்த விக்னேஸ்வரி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கழிவறைக்கு சென்று நீண்டமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தோழிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது விஷ வாயு கசிவு ஏற்பட்டதையும், அந்த வாயுவால் மூச்சுத்திணறி விக்னேஸ்வரி மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து அவர்கள், தங்கும் விடுதி உரிமையாளருக்க தகவல் கொடுத்தனர். உடனே அவரும், ஊழியர்களும் சேர்ந்து விக்னேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவ மாணவி

  இதுகுறித்த தகவல் அறிந்ததும் மடிகேரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

  இதுதொடர்பாக மடிகேரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன மாணவி மருத்துவம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்