வீடுகள் பாதிக்காத வகையில் காவிரி-குண்டாறு வாய்க்கால் அமைக்கும் பணியை செயல்படுத்த வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

வீடுகள் பாதிக்காத வகையில் காவிரி-குண்டாறு வாய்க்கால் அமைக்கும் பணியை செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2021-10-25 18:51 GMT
கரூர், 
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். மொத்தம் 409 மனுக்கள் வரப்பெற்றன. அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
குளித்தலை தாலுகா, தாளியாம்பட்டி அஞ்சல், அய்யநெரி கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
வாய்க்கால் வெட்டும் பணி
அய்யநெரி கிராமத்தில் காவிரி-குண்டாறு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி ஏற்கனவே குடியிருப்பு வீடுகளுக்கு தென்புறத்தில் உள்ள காலியிடங்கள் வழியாக நிலம் சர்வே செய்யப்பட்டது. அதனால் வீடுகள் பாதிக்காத நிலையில் இருந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி வாய்க்கால் அமைக்கும் பணிக்காக அளவீடு செய்தவர்கள் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்படவேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறினார்கள். 
எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு இடம் இல்லை. இது சம்பந்தமாக நாங்கள் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி மனு கொடுத்திருந்தோம். அந்த மனுவில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 18-ந்தேதி மீண்டும் எங்கள் வீடு பாதிக்கப்படும் படியாக அளவீடு செய்து வீட்டை காலி செய்ய வற்புறுத்துகிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே சர்வே செய்த படி குடியிருப்பை ஒட்டி தென்புறத்தில் காலியாக உள்ள காட்டு நிலங்கள் வழியாக வாய்க்கால் வெட்டும் பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கூரை பூச்சு தரமில்லாமல்...
மணவாடி ஊராட்சியை சேர்ந்த கந்தசாமி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தாந்தோணி ஒன்றியம், மணவாடி மேல்நிலைப்பள்ளிக்கு 2015-16-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் 2 மாடி கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் ேததி பள்ளி பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 7-ந்தேதி பள்ளி நடைபெற்று கொண்டிருக்கும் போது 2-வது மாடி ஆசிரியர்கள் அறையின் மேற்கூரை பூச்சு தரமில்லாமல் இடிந்து விழுந்துவிட்டது. அப்போது ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடைவேளைக்கு வெளியில் வந்துவிட்டனர். எனவே உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மற்ற வகுப்பறைகளும் தரமில்லாமல் உள்ளதால் மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பள்ளியை ஆய்வு செய்து தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். மேலும், வகுப்பறைகள் அனைத்தும் மாணவர்கள் அமர்வதற்கு பாதுகாப்பாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்