ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேர் திடீர் கைது

ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேர் திடீர் கைது

Update: 2021-10-25 17:54 GMT
கோத்தகிரி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார்  திடீரென்று கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

5 தனிப்படைகள் 

இதற்கிடையே சயான், விபத்தில் இறந்த கனகராஜ் (ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தனிப்படை விசாரணை நடத்தியது. வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மேலும் ஜாமீனில் உள்ள சம்சீர்அலி, சதீசன், பிஜின், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி ஆகிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி பதிவு செய்தனர்.

போலீசார் தீவிர விசாரணை 

விபத்தில் கனகராஜ் இறந்தது, கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்தது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதா அல்லது திட்டமிட்டு நடந்த சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.  

மேற்கண்ட 2 வழக்குகள் குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் சிலரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். முக்கிய தகவல்கள் பெறப்பட்டு சாட்சிகள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கனகராஜ் உறவினர்கள், நண்பர்களிடம் இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. 

2 பேர் அதிரடி கைது 

இந்த நிலையில் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக தடயங் களை அழித்ததாக சேலம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால் (வயது 44), அவருடைய நெருங்கிய உறவினரான சேலம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் (34) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார்  அதிரடியாக கைது செய்தனர். 

முன்னதாக சேலம் ஆத்தூரில் இருந்து விசாரணைக்காக அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் தனபால், ரமேஷ் ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

சிறையில் அடைப்பு 

கைதான 2 பேரையும் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, 2 பேரையும் வருகிற 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 இதையடுத்து 2 பேரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 
கனகராஜ் மரண வழக்கை சேலம் போலீசார் மறுவிசாரணைக்கு எடுத்து உள்ள நிலையில், அவரது அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

4 பிரிவின் கீழ் வழக்கு 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பே, இது தொடர்பான தகவல் தற்போது கைதான தனபால், ரமேஷ் ஆகியோருக்கு தெரிந்து உள்ளது. ஆனால் அவர்கள் போலீஸ் விசாரணையில் அதை தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர். 

மேலும் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்