ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணம்

ஸ்ரீமுஷ்ணம் குளத்தில் ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-25 17:47 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் சந்தை தோப்புக்கு அருகில் உள்ள அருமை செட்டிக்குளத்தில் ரத்தக்காயங்களுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். 
விசாரணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் குன்னத்தேரி பாட்டை வடக்கு தெருவை சேர்ந்த அருளப்பன் மகன் விவசாயியான ஜெயராஜ் (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 23-ந்தேதி விருத்தாசலம் அருகில் உள்ள பூதாமூரில் நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றதும், அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. 

கொலையா?

இதையடுத்து ஜெயராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு குளத்தில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்