ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ 17 லட்சம் நகை பணம் கொள்ளை

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ 17 லட்சம் நகை பணம் கொள்ளை

Update: 2021-10-25 17:23 GMT
துடியலூர்

கோவை அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.17 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். 

ஓய்வு பெற்ற அதிகாரி 

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள வடமதுரை வி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 60). இவர் பொதுப்பணித்துறை யில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ராணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 
இந்த நிலையில் கரிகாலன் சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்றார். 

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் இரவில் அவர் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்ததும், கதவை திறக்க சென்றபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது வீட்டின் அறையில் இருக்கும் பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. 

நகை, பணம் கொள்ளை

பீரோவில் நகை வைத்திருந்த பெட்டிகள் அனைத்தும் கீழே ஆங்காங்கே சிதறி கிடந்தது. அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இது குறித்து துடியலூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்